இத்திருக்கோவிலில் பங்குனி உத்தரத்தில் திருத்தேர் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது. நவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது
தல சிறப்பு:
ஒரே கோவிலில் பயமுறுத்தும் காளியாகவும், அரவணைக்கும் அழகு அன்னையாகவும் அம்பாளை காண்பதரிது. ஆனால் பட்டமங்கலத்தில் உள்ள ஸ்ரீ அழகு சௌந்தரி கோவிலில்தான் உமையவள், நவமரத்தடியில் காளியாகவும், அழகின் அழகியான அழகு சௌந்தரியாகவும் இருந்து அருள் பாலித்து வருகிறாள்.
எம்பெருமான் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 33 ஆம் திருவிளையாடல் நடைபெற்ற திருத்தலம்.
திறக்கும் நேரம்:
காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை
முகவரி:
பட்டமங்கலம்
சிவகங்கை மாவட்டம்
தமிழ் நாடு,630310
போன்:
9442041391
பொது தகவல்:
பிரசித்தி பெற்ற கிழக்கு நோக்கி உள்ள ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி கோவிலும் பட்டமங்கலத்தில் அருள்மிகு ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவிலின் அருகில் உள்ளது.
தல வரலாறு:
தமிழ்க்கடவுளாம் முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களான அம்பா, துலா,நிதர்த்தனி,அப்பிரகேந்தி,மேகேந்தி,வருஷகேந்தி ஆகியோர் மகா சித்திகளான அனிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, வசித்துவம்,பிரகாமியம், ஈசத்துவம் என்ற அஷ்டமாசித்திகளை உபதேசிக்கும்படி திருக்கயிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் வேண்டினர்.ஈஸ்வரனோ, கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்திகள் தேவையில்லை எனவும், இயற்கையாகவே அவர்கள் அஷ்டமாசித்திகள் அமையப் பெற்றவர்கள் எனவும் கூறினார்.இருப்பினும் அவர்கள் தொடர்ந்து வேண்டவே, உமாதேவியாரின் பரிந்துரையின்படி, கயிலை மலையானும் அவர்களுக்கு, கிழக்கு நோக்கி, தெட்சிணா மூர்த்தி வடிவில் அஷ்டமகா சித்துக்களை உபதேசித்து அருளினார். அவ்வாறு உபதேசிக்கும் போது, கார்த்திகை பெண்கள் கவனக்குறைவாக இருக்கவே, நெற்றிக்கண் உடையோனும் சினந்து, கார்த்திகை பெண்களை கதம்ப வனத்தில் கதம்ப மகரிஷி ஆசிரமப் பக்கம் ஆயிரம் ஆண்டுகள் ஆலமரத்தடியில் கல்லாகி கிடக்குமாறு சாபமிட்டார். பக்குவமில்லாதவர்களுக்கு உபதேசம் செய்ய பரிந்துரை செய்த பொன்னழகு மேனியாளான ஸ்ரீ உமா தேவியாரை நாவல் மரத்தடியில் காளியாக தவமிருக்கவும் கட்டளையிட்டார். தேவியை தனியே விட தேவன் மனம் இணங்குமா? காவலாக நந்தி தேசனை அனுப்பி வைத்தார்.ஆயிரம் ஆண்டுகள் கழித்து திரும்பவும் மதுரை சொக்கராக சுவாமி எழுந்தருளிய காலத்தில் பாறைகளாக இருந்த கார்த்திகை மாதர்களை எழுப்பி மீண்டும் அஷ்டமாசித்தி உபதேசித்தார். அதே சமயத்தில், காளியாய் மாற்றிய பாவம் நீங்க , உலகின் அழகியாய் மாற்றி, உமையவளை அழகு சௌந்தரியாய் ஆட்கொண்டார் எம்பெருமான்! மேற்சொன்ன இந்த நிகழ்வுதான் எம்பெருமான் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 33 ஆம் திருவிளையாடலாக உள்ளது. இத்திருவிளையாடல் நடைபெற்ற திருத்தலம்தான் இன்றைக்கு பட்டமங்கலத்தில் ஸ்ரீ அழகு சௌந்தரி திருக்கோவிலாக உருவெடுத்துள்ளது.அட்டமாசித்தி உபதேசித்த எம்பெருமான் தான், அட்டமாசித்தி தெட்சிணாமூர்த்தி என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கி தனிக்கோவிலில் இருந்து அருள் பாலிக்கிறார்.
இருப்பிடம் : பட்டமங்கல நாடானது, செந்தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில், திருப்பத்தூரிலிருந்து தெற்கே 5கி.மீ தொலைவிலும் திருக்கோட்டியூரிலிருந்து கிழக்கே 5கி.மீ தொலைவிலும் உள்ளது.