Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கொடுங்குன்றநாதர், விஸ்வநாதர், மங்கைபாகர், உமாமகேஸ்வரர்
  அம்மன்/தாயார்: குயிலமுதநாயகி, விசாலாட்சி, தேனாம்பாள், தேனாம்பிகை, அமிர்தேஸ்வரி
  தல விருட்சம்: உறங்காப்புளி
  தீர்த்தம்: மதுபுஷ்கரிணி, தேனாழி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : காரணாகமம்
  புராண பெயர்: எம்பிரான்மலை, திருக்கொடுங்குன்றம்
  ஊர்: பிரான்மலை
  மாவட்டம்: சிவகங்கை
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

திருஞானசம்பந்தர், அருணகிரியார்
தேவாரப்பதிகம்



மயில்புல்குதண் பெடையோடு உடனாடும் வளர்சாரல் குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக் கொடுங்குன்றம் அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்தி நின்றாடி எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.



-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 5வது தலம்.



 
     
 திருவிழா:
     
  சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சிவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (ஐப்பசி முதல் பங்குனி வரையில்), சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பாதாளம், பூமி, மலை என மூன்றடுக்கு கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 195 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 - மதியம் 12 மணி, மாலை 4 - இரவு 8 மணி வரை. மலை மீதுள்ள மங்கைபாகர் சன்னதி மட்டும் மாலையில் 6.30 வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை - 630 502. சிவகங்கை மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4577 - 246 170, +91-94431 91300. 
    
 பொது தகவல்:
     
 

இத்தலத்தின் விருட்சம் உறங்காப்புளி மரமாகும். பல நூற்றாண்டுகளாக இருக்கும் இம்மரம் பூக்கும், காய்க்கும். ஆனால், பழுக்காது. காய்ந்த நிலையிலேயே புளியங்காய், கீழே உதிர்ந்து விடும். இதன் இலைகள் எப்போதும் விரிவடைந்த நிலையிலேயே இருக்கும். இதுதவிர, மங்கைபாகர் சன்னதிக்கு மேலே ஒரு பாறையில் "பெயரில்லா விருட்சம்' என்ற பெயரில் ஒரு செடி உள்ளது. இதற்கு பெயர் கிடையாது என்பதால், இவ்வாறு அழைக்கிறார்கள். இந்த செடியும் பூப்பதில்லை.


 
     
 
பிரார்த்தனை
    
 

கருத்து வேறுபாடுள்ள தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொள்ள ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் சுக்கிரன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள், இங்கு அம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பிகைக்கு வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, விசேஷ பூஜைகள் செய்வித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
 

மூன்றடுக்கு சிவன் கோயில்: ஒருசமயம் வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என போட்டி எழுந்தது. ஆதிசேஷன் மேரு மலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும், அதை வாயு பகவான் தனது பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பதே போட்டி. ஆதிசேஷன், தன் பலத்தால் மலையை இறுகப் பற்றிக்கொண்டார். வாயு பகவான் எவ்வளவோ முயன்றும், மலையை அசைக்க முடியவில்லை. இந்த போட்டியின் போது, மேரு மலையிலிருந்து துண்டுகள் பெயர்ந்து விழுந்தது. அவ்வாறு விழுந்த குன்றே, இங்கே மலையாக உள்ளது.  இம்மலையில் சிவன் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் இருந்து காட்சி தருகிறார். பாதாளத்திலுள்ள கோயிலில் சிவன், கொடுங்குன்றநாதர் என்ற பெயரில் அருளுகிறார். இவருக்கான அம்பிகை, குயிலமுதநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். மத்தியிலுள்ள கோயிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மேல் பகுதியில் அம்பிகையுடன் மங்கைபாகராக காட்சி தருகிறார்.


நந்தி இல்லாத சிவன்: கைலாயம் எனப்படும் மேலடுக்கிலுள்ள கோயில் குடவறையாக அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மங்கைபாகர், அம்பிகையுடன் இணைந்து, அகத்தியருக்கு திருமணக்காட்சி அருளிய கோலத்தில் காட்சி தருகிறார். இதை சிவனின், "அந்நியோன்ய கோலம்' என்கிறார்கள்.  இந்த சன்னதியின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ,பார்வதி திருமணம் காணச்சென்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. மங்கைபாகர் சிலை, நவ மூலிகைச் சாற்றால் செய்யப்பட்டதாகும். எனவே, இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. பவுர்ணமியன்று காலையில் புனுகு, சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர். இவரது சன்னதியில் காசிராஜன் கொடுத்த, "உடையவர் லிங்கம்' என்ற சிறிய லிங்கம் இருக்கிறது. மங்கைபாகருக்கு அபிஷேகம் கிடையாது என்பதால், அவருக்குச் செய்ய வேண்டிய அபிஷேகம் அனைத்தும் இந்த லிங்கத்திற்கு செய்கின்றனர்.


குறிஞ்சி நிலத்தில் (குன்றில்) அமைந்த கோயில் என்பதால், இந்நிலத்திற்கு உரிய தேன், தினைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர். இவரது சன்னதியின் எதிரில் நந்தி கிடையாது. சிவன், அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார். எனவே, சிவன் இங்கு நந்திதேவர் இல்லாமல் அம்பிகையுடன் காட்சி தந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இவருக்கு எதிரில் நந்தி இல்லை என்கிறார்கள். மேலும் இவருக்கு கொடிமரம், பலிபீடமும் கிடையாது. கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யும்போது, சுவாமி சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் என்னும் எட்டு வகையான மூலிகை மருந்துகளை வைப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் சிவன் சிலைக்கு கீழே இவ்வாறு வைக்கப்படுவதில்லை. இவர் முதலும், முடிவும் இல்லாதவராக இருப்பதால், அஷ்டபந்தனம் சாத்தப்படுவதில்லை என்கிறார்கள்.


தினம் தினம் புத்தாடை!: மங்கைபாகர் இத்தலத்தில் போக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு ஒருமுறை அணிவித்த வஸ்திரத்தை, மறுபடியும் அணிவிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் இவருக்கு புத்தாடையையே அணிவிக்கின்றனர். பூஜையின்போது 16 முழத்தில் வேஷ்டி மற்றும் துண்டும், அம்பாளுக்கு 16 முழ புடவையும் அணிவித்து அலங்கரிக்கிறார்கள். இந்த சிவன், கையில் 4 வேதங்களை வைத்தபடி காட்சி தருகிறார். எனவே இவருக்கு, "வேதசிவன்' என்றும் பெயருண்டு. கல்வியில் சிறப்பிடம் பெற மாணவர்கள், இவருக்கு வெள்ளை நிற மலர் மாலை சாத்தி, வெண்ணிற வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். இத்தலத்தில் தெட்சிணாயண புண்ணிய காலம் முடியும் கடைசி மூன்று மாதங்களிலும், உத்தராயண புண்ணிய காலம் துவங்கிய முதல் மூன்று மாதங்களும் என தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் (ஐப்பசி முதல் பங்குனி வரையில்), சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம்.


முருகன் பூஜை: அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடனக்காட்சி காட்டியதாக ஐதீகம். தனிச்சன்னதியில் இருக்கும் இந்த முருகன், வயோதிக கோலத்தில் இங்கு காட்சி தருகிறார். வழக்கமாக முருகன் சன்னதி எதிரில் மயில் வாகனம்தான் இருக்கும். ஆனால், இவரது சன்னதி எதிரில் யானை வாகனம் இருக்கிறது. முருகன் சன்னதி எதிரில், 18 துவாரங்களுடன் கூடிய பலகணியுடன் (ஜன்னல்) மதில் உள்ளது. இம்மதில் வழியாகத்தான் யானையைப் பார்க்க முடியும். தைப்பூசத்தன்று முருகன், இக்கோயிலிலிருந்து சற்று தூரத்திலுள்ள பாலாறு தீர்த்தத்திற்கு சென்று தீர்த்தவாரி உற்சவம் காண்கிறார். முருகன், பத்மாசுரனை சம்ஹாரம் செய்ததால் தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக, இத்தலத்தில் இரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தோஷம் நீங்கப்பெற்றார். இந்த லிங்கங்கள் கொடுங்குன்றநாதர் சன்னதி பிரகாரத்தில் சொக்கலிங்கம், ராமலிங்கம் என்ற பெயர்களில் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களுக்கும் மத்தியில் முருகன், பால ரூபத்தில் காட்சி தருகிறார். இந்த அமைப்பை, மகனுக்கு பாதுகாப்பாக இருக்கும் வகையில் தந்தை இருபுறமும் காவலராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இக்கோயிலில் உள்ள பைரவருக்கு சித்திரை திருவிழாவின்போது, பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபடுகின்றனர். முருகனைப்போல, பைரவரும் சிவனிலிருந்து தோன்றியவர் என்பதன் அடிப்படையில், பால்குடம் எடுப்பதாகச் சொல்கிறார்கள். ஞாபக மறதி, பயப்படும் குணம் உள்ளவர்கள் இவருக்கு சம்பா சாதம் படைத்து, வடை மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். பைரவருக்கென கோயில் வளாகத்தில் தனி தீர்த்தமும் உள்ளது. இக்கோயிலில், "குஷ்ட விலக்கி சுனை' என்ற தீர்த்தமும் இருக்கிறது. நாள்பட்ட வியாதி, தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி, சிவனை வழிபட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.


மலை வடிவில் சிவன்!: வேதாரண்யம் தலத்தில் சிவனை தரிசித்த ஞானசம்பந்தர், இத்தலத்திற்கு வந்தார். வழியில் தூரத்திலிருந்து அவர் மலையைக் கண்டபோது, சிவன் மலையின் வடிவில் காட்சி தந்தார். மகிழ்ந்த சம்பந்தர், மலையாகக் காட்சி தந்த சுவாமியை, "எம்பிரான் மலை' (சிவபெருமான் மலை) எனச்சொல்லி பதிகம் பாடினார். எனவே தலம், எம்பிரான்மலை என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இப்பெயரே, "பிரான்மலை' என மருவியது.


மன்னனுக்கு திருவிழா: கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி, ஆட்சி செய்த தலம் இது. இம்மன்னன் இக்கோயிலுக்கு அதிகமாக திருப்பணி செய்துள்ளார். சித்திரை மாத பிரம்மோற்ஸவத்தின்போது இவருக்காக, "பாரி உற்சவம்' என ஒருநாள் விழா எடுக்கிறார்கள். அன்று, "முல்லைக்கு தேர் கொடுத்த வைபவம்' நடக்கும். அன்று பாரி, ஒரு தேரில் பரம்புமலை அடிவாரத்திற்கு செல்வார். அங்கு முல்லைச்செடிக்கு அருகில் தேரை நிறுத்திவிட்டு, தனியே கோயிலுக்குத் திரும்பிவிடுவார். அதன்பின்பு, மன்னர் மக்களுக்கு தானம் செய்யும், "படியரிசி அளப்பு வைபவம்' நடக்கும். அப்போது பக்தர்களுக்கு, அரிசியை தானமாக தருகின்றனர்.


 
     
  தல வரலாறு:
     
 

கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த சிவன், அகத்தியரை தென்திசையில் பொதிகை மலைக்குச் செல்லும்படி கூறினார். அகத்தியருக்கோ, சிவனின் திருமணத்தைக் காண வேண்டுமென்ற ஆசை இருந்தது. தனது எண்ணத்தை சிவனிடம் முறையிட்டார். தென்திசையில் அவருக்கு தனது திருமணக்காட்சி கிடைக்கும் என்றார் சிவன். அப்போது அகத்தியர் சிவனிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்கோல காட்சி கிடைக்க வேண்டும் என வேண்டினார். அதன்படி அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், பல இடங்களில் சிவனின் திருமணக்கோலத்தை தரிசித்தார். அவ்வாறு அவர் தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று. இக்கோயில் குன்றக்குடி தேவஸ்தானத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: (ஐப்பசி முதல் பங்குனி வரையில்), சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம்.இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar