சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி, சித்ரா பவுர்ணமி, வைகாசியில் பிரம்மோற்சவம், ஆடியில் வசந்த உற்சவம், வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், ஆடிக்கிருத்திகை, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஐப்பசியில் கமடேஸ்வரர் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம், கந்த சஷ்டி உற்சவம், கார்த்திகையில் சோமவார உற்சவம், கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழியில் மாணிக்கவாசகர் உற்சவம், நடராஜர் ஆருத்ரா தரிசனம், அம்பாளின் தீர்த்தவாரி, தை மாதத்தில் புஷ்பாஞ்சலி, வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், மகுடாபிஷேகம் ஆகியவை இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
தல சிறப்பு:
பிருங்கி மகரிஷி, பராசரர், வியாசர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் ஆகிய முனிவர்களும், இந்திரன், வருணன் ஆகிய அஷ்டதிக்கு பாலகர்களும், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் ஆகிய நவக்கிரகங்களும், ஆமைவடிவில் கமடேஸ்வரராக திருமாலும் அன்னையை இத்திருக்கோயிலில் வழிபட்டுள்ளனர். குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது என்ற செய்திகளும் உண்டு.
மேலும், மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜி 1677-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் திகதி அன்று ஸ்ரீகாளிகாம்பாளை வழிபட்ட பின்னரே சிவாஜி தன்னை சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார் என்பது வரலாறு. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் "யாதுமாகி நின்றாய் காளி" என்று தான் எழுதிய பாடல் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளை மனதில் வைத்து எழுதப்பட்டதாகும்.
திறக்கும் நேரம்:
காலை சந்தி பூஜை 6 மணி முதல் 7 மணி வரை, உச்சிக்காலம் பகல் 12 மணி, சாயரட்சைமாலை 5.30 மணி முதல் 6 மணி வரை, அர்த்த ஜாமம் இரவு 9 மணிக்கு என பூஜைகள் நடைபெறுகிறது.
முகவரி:
ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம்
தம்பு செட்டித்தெரு,
பிராட்வே,
சென்னை...600001.
போன்:
044 25229624
பொது தகவல்:
திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீகாளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து அந்த மஞ்சளை பயன்படுத்துவது மிகுந்த பலனை தரும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தை வெட்டி அதை விளக்காக பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும், மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுவதாக கூறப்படுகிறது.
பிரார்த்தனை
இத்தலத்தைப் பற்றி மச்சபுராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஸ்ய புராணங்களில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. சென்னை காளிகாம்பாளை ரிஷிகளும், தேவர்களும் வணங்கியதாக புராணங்கள் சொல்கின்றன. வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் மற்றும் வருணன் முதலான முனிசிரேஷ்டர்களும் தேவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
செல்வத்துக்கு அதிபதியாகிய குபேரன், இத்தலம் வந்து ஸ்ரீ காளிகாம்பாளை வழிபட்ட பின்னர்தான் குன்றாத செல்வகளை பெற்றான் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இவ்வாலயம் பற்றியும் அம்பாளின் வழிபாடுகள் பற்றியும் பக்தர்கள் அறியவேண்டியது அவசியம்
ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் ஆலயத்தில் முப்பத்தி மூன்று பஞ்சலோகத் திருமேனிகள் உள்ளன. இவை அனைத்தும் தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேர்த்திக்கடன்:
இவ்வாலயத்தில் அமைந்திருக்கும் அகோர வீரபத்ர சுவாமிக்கு பவுர்ணமி நாளன்று வெற்றிலை, மாலை வைத்து வழிபட்டால் பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்றவை எது பற்றியிருந்தாலும் உடனே விலகிவிடும் என்கிறார்கள் ஆலய அர்ச்சகர்கள்.
அம்பாளை வேண்டுவதன் மூலம் திருமணத்தடை நீங்குகிறது. அதனால் நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளை வண்ங்கிவிட்டு அவள் பாதத்தில் வைத்து எடுத்த மஞ்சளை தினமும் வெறும் வயிற்றில் பச்சைத் தண்ணீரில் கலந்து உட்கொண்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது. அப்படி புத்திர பாக்கியம் பெற்றவர்கள் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்து வருகிறார்கள்’’ என்கிறார்.
தலபெருமை:
கி.பி.1640ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் இத்திருக்கோயில். ஆரம்பத்தில் அமைந்திருந்தது. ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பிரம்மஸ்ரீ முத்துமாரி ஆச்சாரி என்பவரால் தம்புசெட்டித் தெருவிற்கு கோயில் இடமாற்றம் செய்யப்பட்டு வழிபாடுச் செய்யப்பட்டு வருகிறது.
புராண வரலாற்றில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீ காளிகாம்பாள், பழங்காலத்தில் மீனவர்களும் மற்றவர்களும் செந்தூரம் சாற்றி வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரும், நெய்தல் நில காமாட்சி என்ற பெயரிலும் ஸ்ரீ காளிகாம்பாள் அழைக்கப்படுகிறார்.
காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீ காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும் என்பதை நினைவூட்டும் வகையில், மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ காளிகாம்பாள் பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது