Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆதி சுயம்பு விநாயகர்
  ஊர்: மேகிணறு
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் நூற்றியெட்டு சிறப்பு பூஜைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆதி சுயம்பு விநாயகருக்கு நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. மாட்டுப் பொங்கல் அன்று இப்பகுதி விவசாயிகள் தங்களது மாடு, கன்றுகளை அழைத்து வந்து பொங்கல் வைத்தும், பூஜை செய்தும் வழிபடுகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள விநாயகர் சுயம்புவாக உருவானவர். விநாயகருக்கு வாகனமாய் முன் மண்டபத்தில் நந்தியெம்பெருமான் வீற்றிருப்பதும் வேறு எந்த விநாயகர் தலங்களில் காணாத சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1மணி வரை, மாலை 6 முதல் 7 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில், மேகிணறு, மேட்டுப்பாளையம் ரோடு, அன்னுõர் தாலுக்கா கோயம்புத்தூர். 641653  
   
போன்:
   
  +91 - 94421 62729 
    
 பொது தகவல்:
     
  மேகிணறில் கிழக்கு நோக்கி அருளும் சுயம்பு விநாயகப் பெருமானுக்கு அருள்வதற்காகவே அன்னூரில் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள மன்னீஸ்வரர் மேற்கு நோக்கிக் காட்சி தருவதை இந்த வரலாறுக்கு ஓர் ஆதாரமாகக் கூறுகின்றனர். முன் மண்டபம், கருவறை என அமைந்துள்ள கோயிலில் கருவறைக்கு மேலே விமானம், கலசம் என எல்லாமுமாக பெரிய வேப்பமரம் நீண்டு வளர்ந்துள்ளது. கருவறையில் ஆதி சுயம்பு விநாயகர், வேண்டியவர்களின் குறைகளை நீக்கி, அருட் பலன்களை நிறைவிக்கும் விதமாக அற்புத தரிசனம் தருகிறார். அவருக்கு அருகிலேயே சமீப காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரும், மூஷிகம், பாலமுருகன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். வெளிச்சுற்றில் ஒரு விநாயகரும், மூஷிகம், பலிபீடம், எண்ணற்ற நந்திகள், நாகர் திருமேனிகளும் உள்ளன. நவகோள்களின் சன்னிதியும் இருக்கிறது. வழக்கமாக காவல் தெய்வங்களின் கோயிலில் காணப்படும் குதிரை சிலைகள் இந்த கணபதி கோயில் முன்பும் இருக்கின்றன.

அதற்குக் காரணமாகவும் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. பலகாலம் முன்பு இப்பகுதியை சேர்நத ஒரு தாயும் மகனும் வெளியூர் சென்றுவிட்டுத் திரும்புகையில் அந்த பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அந்தத் தாய் செய்வதறியாது இந்த விநாயகப் பெருமானை நினைத்து, தன் பிள்ளைக்கு உடல் நிலை சரியாகிவிட்டால் கோயிலுக்கு ஒரு வெள்ளை குதிரை செய்து தருவதாக வேண்டினார். ஓரிரு நாளில் மகனின் உடல்நிலை சரியாகவே, நேர்த்திக்கடனாக வெள்ளைக் குதிரை சுதை வடிவில் செய்துள்ளனர். ஒற்றைக் குதிரை வைப்பது முறையாகாது என்பதால் இவ்வூர் மக்கள் சார்பாக ஒரு குதிரையும் செய்யப்பட்டு, இரட்டைக் குதிரைகள் வைக்கப்பட்டுள்ளன. காவல் தெய்வமான கருப்பராய சுவாமியின் வாகனம் குதிரை என்பதால் அவர் இத்தலத்திற்கு காவல் தெய்வமாக வீற்றிருந்து காப்பதாகவே எண்ணி பூஜிக்கின்றனர்.

இப்பகுதி மக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சுகவீனம் ஏற்பட்டால் இந்த கோயிலின் எதிரே அமைந்துள்ள நீண்ட கல்லில் ஒருநாள் முழுவதும் கட்டி வைத்துவிடுகிறார்கள். மறுநாள் அழைத்துச் செல்வதற்குள் அவை நோய் நீங்கி குணமடைந்துவிடுகிறது. இக்கல்லை கனு, மாட்டு வைத்தியக் கல் என அழைக்கின்றனர். இப்படி குணமடைந்த கால்நடைகளின் உரிமையாளர்கள், நேர்த்திக்கடனாக நந்தி உருவாரங்கள் செய்து வைக்கின்றனர். வில்வமரத்தின் கீழுள்ள மேடையில் மேற்கு நோக்கிய விநாயகர் மற்றும் நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மாரியம்மன், சிவன், கன்னிமார் சன்னிதிகளும் இருக்கின்றன. கோயிலிற்கு வெளியே அழகிய நந்தவனம் அமைந்துள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  வாழ்வில் வினைகள் விலகவும், சுபகாரியங்கள் கைகூடி, சுபிட்சம் பெருவும், ஆரோக்கியம் நிலைக்கவும் இங்கு வருகின்றனர். பெண்கள் தங்கள் மனம்போல மாங்கல்யம் பெறவும், மகப்பேறு அடைந்திடவும் இங்கு வந்து பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள விநாயகருக்கு குடம்குடமாக நீர்விட்டு விநாயகரை குளிர்விக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  விநாயகருக்கு வாகனமாய் சன்னிதி முன்னே இருக்க வேண்டிய மூஷிகம் இங்கு கடவுளர்களுடன் சேர்ந்து காட்சி தருவதும், கொழுக்கட்டைப் பிரியனுக்கு வாகனமாய் முன் மண்டபத்தில் நந்தியெம்பெருமான் வீற்றிருப்பதும் வேறு எந்த விநாயகர் தலங்களில் காணாத சிறப்பு. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று தரப்படும் அபிஷேக தீர்த்தத்தை உட்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கே நிலவுகிறது. திங்கள், வெள்ளி தினங்களில் இத்தலத்தில் திருவிழாக் கூட்டம் காணப்படும். அன்றைய தினம் தான் பக்தர்கள் எல்லா சுபகாரியங்களுக்கும் ஆதி சுயம்பு விநாயகப் பெருமானிடம் பூ வரம் கேட்கும் நிகழ்வு நடைபெறுகிறது. காலை ஒன்பது மணிக்கு விசேஷ பூஜையுடன் தொடரும் இந்த நிகழ்வு மதியம் வரை தொடர்கிறது. கோரிக்கையுடன் வரும் பக்தர்கள் வரிசையாக நிற்க, அவரது முறை வந்ததும் தமது கோரிக்கையை அவர்கள் மனதில் எண்ணி விநாயகர் முன் நிற்க, எண்ணற்ற பூக்களை விநாயகப் பெருமானின் சிரசில் வைக்கிறார்கள். அப்பூக்களுள் ஒன்று வலதிசையில் விழுந்தால் உடனே தாங்கள் எண்ணிய சுபகாரியத்தை தொடங்கலாம் என்று விநாயகர் விடைதந்துவிட்டதாக அர்த்தம் கொள்கிறதர்கள். வலதுபக்கமாக பூ எதுவும் விழாவிட்டால், உத்தரவு கிடைக்கவில்லை என்று அகக்காரியத்தை தள்ளி வைக்கிறார்கள். எத்தனையோ பேரின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கும் இந்த கணேசர், தமது கருவறைக்கு விமானம் அமைத்திட இன்று வரை உத்தரவு தரவில்லை.  
     
  தல வரலாறு:
     
  ஆதிமூலக் கடவுளான கணபதிக்கு கோயில் இல்லாத ஊரே ஏன் தெருவை இல்லை என்று கூட சொல்லலாம். ஆனாலும் வித்தியாசமான திருக்கோலத்தில் அவர் அருளும் தலங்கள் சிறப்பானவை. அந்த வகையில் கோவை அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்தை நோக்கி நீண்டு செல்லும் சாலையில் மேகிணறு எனும் சிறு கிராமத்தில் கோயில் கொண்டிருக்கும் சுயம்பு விநாயகர் விசேஷமானவர், வித்தியாசமானவர். கல்யாணம், வீடு கட்டுவது வாகனம் வாங்குவது தொழில் தொடங்குவது என சுபகாரியங்கள் முதல் தேர்தலில் நிற்கலாமா வேண்டாமா எனப் பார்ப்பது வரை அனைத்தையும் இந்தப் பிள்ளையாரின் உத்தரவை வைத்தே தீர்மானிக்கிறார்கள் பலர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் அன்னி என்ற வேடனும், அவரது மனைவியும் வன்னி வனத்தில் வசித்து வந்தனர். விலங்கு, பறவைகளை வேட்டையாடியும், பூமியில் உள்ள கிழங்கு வகைகளைத் தோண்டி எடுத்தும், உண்டு பசியாற்றி வாழ்ந்தனர். ஒரு நாள், காட்டினுள் ஓர் இடத்தில் கிழங்குக்காகத் தோண்டியபோது, கிழங்கு கிடைக்காமல் ஒரு பெரிய வேர் மட்டுமே இருப்பதைக் கண்டான்.

பல அடி ஆழம் தோண்டியும் வேர் நீண்டு கொண்டே போகவே, களைத்துப்போய் உட்கார்ந்தான். அப்போது அசரீரியாய் ஒரு குரல், தோண்டிக்கொண்டே செல். உனக்கு உணவு கிடைக்கும் என்று சொன்னது. குரல் வந்த இடம் நோக்கிச் சென்று பார்த்த போது செடி, கொடிக்குள் பெரிய தொந்தியும், யானை துதிக்கை போன்ற அமைப்பும் கொண்ட சுயம்புத் திருவுருவம் தெரிந்துள்ளது. அசரீரி வாக்குத் தந்தது அந்த விநாயகப்பெருமானே என்பதை உணர்ந்து வணங்கினான். பிறகு அந்த வேர் செல்லும் பாதையிலேயே தோண்டியபோது, அங்கே மிகப்பெரிய கிழங்கு இருந்தது. கிழங்கை தோண்டி உண்ட அவனது மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. வேட்டையாடி உயிர்க்கொலை புரிவதை விடுத்து, அந்தக் கிழங்கினை தினமும் சிறிது வெட்டி எடுத்து உண்ணலாம் என முடிவெடுத்தான். அக்கிழங்கை வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தது. தன் இருப்பிடமான மேகிணறுக்குச் செல்லாமல், அங்கேயே தங்கினான்.

பலநாட்கள் கடந்த நிலையில் கிழங்கு வளர்ந்துகொண்டே இருக்கும் செய்தி பரவவே, பலரும் அங்கு வந்தனர். எனவே எல்லோருக்கும் தரும்பொருட்டு, கிழங்கினை வெட்ட கோடரியைப் பாய்ச்சியபொழுது குபீரென்று ரத்தம் பெருக்கெடுத்தது. அதிர்ந்துபோனவர்கள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தபின்னர் அந்த இடத்தைப் பார்த்தபோது அங்கே ஓர் சிவலிங்கம் காட்சி அளித்தது. அளவில்லா ஆனந்தமடைந்து பணிந்து துதித்தார்கள். மன்னீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார், இறைவன். அன்னி வேடன் வாழ்ந்ததால் அன்னியூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் பெயர் மருவி தற்போது அன்னூர் என அழைக்கப்படும் ஊரில் மிகப்பெரிய கோயில் கொண்டு அருள்கிறார். இத்தலவரலாறு அன்னியூரில் மட்டுமே கல்வெட்டுகளில் உள்ளது. அசரீரியாகக் குரல் எழுப்பி, பெரிய வேர் வடிவில் தோன்றி தந்தையின் திருமேனியை அடையாளம் காட்டிய சுயம்பு விநாயகர் மேகிணறு பகுதியில் கோயில் கொண்டார். தன் தந்தை ஈசன் குடிகொண்டுள்ள இடத்திற்கு வழிகாட்டிய தனயன் விநாயகப்பெருமான் கோயிலுக்கான தலவரலாறை செவிவழிச் செய்தியாகவே காலம்காலமாகச் சொல்லி வருகின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள விநாயகர் சுயம்புவாக உருவானவர். விநாயகருக்கு வாகனமாய் முன் மண்டபத்தில் நந்தியெம்பெருமான் வீற்றிருப்பதும் வேறு எந்த விநாயகர் தலங்களில் காணாத சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar