Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பரமஸ்வாமி
  உற்சவர்: சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  தல விருட்சம்: ஜோதி விருட்சம், சந்தனமரம்.
  தீர்த்தம்: நூபுர கங்கை
  புராண பெயர்: திருமாலிருஞ்சோலை
  ஊர்: அழகர்கோவில்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

மங்களாசாசனம்





பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார்

சிந்துரச் செம்பொடி போல் திருமாலிருஞ் சோலையெங்கும் இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் மந்தரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ் சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங் கொலோ.




-ஆண்டாள்




 
     
 திருவிழா:
     
  சி்த்திரைத் திருவிழா - 10 நாட்கள் ஆடிப் பெருந்திருவிழா - 13 நாள் ‌ஐப்பசி தலை அருவி உற்சவம் - 3 நாள் இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வாரத்தின் சனி ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 93 வது திவ்ய தேசம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள் மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்- 625 301 மதுரை மாவட்டம்.  
   
போன்:
   
  +91 - 452-247 0228 
    
 பொது தகவல்:
     
  புத்தம், சமணம், முஸ்லிம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதற்காக சரித்திர சான்றுகள் உள்ளன. வைணவம், சைவம் என்ற பேதமில்லாமல் இக்கோயிலில் ஆராதனை நடைபெறுவது மற்றொரு சிறப்பு.  
     
 
பிரார்த்தனை
    
  இங்குள்ள அழகுமலையானை வணங்கினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய ‌தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் மழைவரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமா‌ளை வணங்கலாம். இவை தவிர பெரும்பாலும் குடும்ப நலம், கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வருகிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடு்த்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக முடி காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு. பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூ‌மாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 
    
 தலபெருமை:
     
  கருப்பண்ணசுவாமி : இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.  இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.

கோட்டை : விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக  ‌‌செலுத்துவார்கள்.

அழகர் ‌கோயில் தோசை : காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.

நூபுர கங்கை : சிலம்பாறு - ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது.

பெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.  6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் .
சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.
 
சிறப்பு தகவல்: மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா தமிழகத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும். இதில் மீனாட்சிக்கு திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும்  கண்டு வந்தால் வாழ்க்கை முழுவதும் இனிமையாக கழியும் என்பது நம்பிக்கை.

அழகர் ஆற்றில் இறங்குதல்: மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமே, இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது மகரிஷியை காண  துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசரோ, "மண்டூக பவ' அதாவது "மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ' என சாபமிட்டார்.

சாபம் பெற்ற சுதபஸ், ""துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்களை கவனிக்க வில்லை. எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்,'' என வேண்டினார். அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்,'' என்றார். அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து, மீண்டும் கோவில் திரும்பி செல்லும் வரை அழகர் சுமார் 7 வாகனங்கள் மாறுகிறார்.

மாசியில் தேனூர் மண்டபத்தில் நடந்த விழா:
மண்டூக மகரிஷிக்கு காட்சி கொடுப்பதற்காக அழகர் கோவிலிலிருந்து பெருமாள் தேனூர் மண்டபத்தில் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சிதரும் சித்திரை திருவிழா ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. அதே போல் மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.சைவத்திற்கு தனி விழா. வைணவத்திற்கு தனிவிழா என்ற கொண்டாடப்பட்டு வந்தது. திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி, சைவ, வைணவ ஒற்றுமை திருவிழா ஆக்கி விட்டார். அழகர்கோவிலில் தான் லட்சுமி, பெருமாளைக் கைப்பிடித்தாள். அன்றுமுதல் கல்யாண சுந்தரவல்லி என்னும் பெயர் பெற்றாள் அன்னை. இந்த திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக் கொண்டது. மக்கள் மனதை கொள்ளையிட்டதால் இவர் "கள்ளழகர்' ஆனார்.

அழகரின் அபூர்வ வரலாறு: ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம, நியாயம் அழிந்து விடக்கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன்.  சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து ""வேண்டியதை கேள்'' என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள்  நிரந்தரமாக இங்கேயே எழுந்தருள வேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான். தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் "அழகு'. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.

தல சிறப்பு: பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.  பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர்.

கள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது: அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள்.மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார்.   இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் "கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், "வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.

வைகை தோன்றியது எப்படி: மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர்.  ""தங்களுடன் வந்துள்ள  அனைவரும் உடனடியாக சாப்பிடச்சொல்லுங்கள். இங்கே உணவுவகை கொட்டிக் கிடக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவா போய் விடும்?'' என்றனர். சிவன் அவர்களிடம், ""இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ, எனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,'' என்றார்.  விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். பெண் வீட்டார்திகைத்தனர்.""மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே,'' என வெட்கி நின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர். திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான். அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன். அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான். ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், "" மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது. உடனே அங்கு பாய்ந்தோடு,'' என கட்டளையிட்டார். குண்டோதரனிடம், நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள்,'' என்றார்.  இதுவே "வைகை' ஆனது.  கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அது புண்ணிய நதியாக மாறியது. இப்படி கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால்  "வேகவதி' எனப்பட்டது. வைகையை பாழடித்து விட்ட நாம்,  அழகரையே வாய்க்கால்  கட்டி இறக்கி விட்டிருக்கும் நாம், அவரிடம் பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு, மழை பொழிய வேண்டுவோம்.
 
     
  தல வரலாறு:
     
  எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூல‌லோகத்தில் தற்சமயம் ‌கோயில் இருக்கும் அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தபசுசெய்கிறார்.   இம்மலை 7 மலைகளை கொண்டது. 
தர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் நின்னை ஒரு மு‌றையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு தர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம் (வட்ட வடிவ) உள்ள ‌கோயில் கட்டப்பட்டது. 
 
     
சிறப்பம்சம்:
     
  விஞ்ஞானம் அடிப்படையில்: தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும்.  
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar