Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன் ), கல்யாண ஜகநாதர்
  உற்சவர்: கல்யாண ஜெகந்நாதர்
  அம்மன்/தாயார்: கல்யாணவல்லி, பத்மாசனி
  தல விருட்சம்: அரசமரம்
  தீர்த்தம்: ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்
  புராண பெயர்: திருப்புல்லணை
  ஊர்: திருப்புல்லாணி
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

ஓதிநாமங் குளித்து உச்சி தன்னால் ஒளிமாமலர் பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின் ஆதுதாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய் போதும் மாதே! தொழுதும் அவன் மன்னு புல்லாணியே.

-திருமங்கையாழ்வார்.
 
     
 திருவிழா:
     
  பிரம்மோற்சவத் திருவிழா - பங்குனி மாதம் ராமர் ஜெயந்தி திருவிழா - சித்திரை மாதம். இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி மற்றும் வாரத்தின் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கோயிலில் கூட்டம் பெருமளவில் இருக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 96 வது திவ்ய தேசம்.ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம் . பல நூற்றாண்டுகளாக இருக்கும் (பெருமாள் காட்சி தந்தாக கூறப்படுகிற) அரசமரம் .  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 .30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி - 623 532 ராமநாதபுரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4567- 254 527; +91-94866 94035 
    
 பொது தகவல்:
     
  ஆதிஜெகந்நாதருக்கு பங்குனி யிலும், ராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இவ்விழாக்களில் ஜெகந்நாதர், ராமர் இருவரும் கருட வாகனங்களில் எழுந்தருளுவர். ஜெகந்நாதர் பங்குனி உத்திரத்தன்றும், சித்ராபவுர்ண மியன்று ராமபிரானும் தேரில் எழுந்தருளுவர்.  
     
 
பிரார்த்தனை
    
  பிள்ளை வரம் கேட்டல்தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது முன்ஜென்ம பாவங்கள் விலகும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத்தடை உள்ளவர்கள் உற்சவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  தாயாருக்கு புடவை சாத்துதல், தவிர பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். பிரசாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். வசதிபடைத்தவர்கள் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி அளிக்கலாம். 
    
 தலபெருமை:
     
 
சயன ராமன்: சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக  சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.

பிள்ளை வரம் பெற: குழந்தை பாக்கியத்திற்காக தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தைமனைவியருக்கு கொடுத்தார். அதை பருகிய தசரத பத்தினியருக்கு குழந்தைகள் (ராம சகோதரர்கள்) பிறந்தனர். இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில்  அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்து அங்கு தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கணவனும், மனைவியும் உபவாசகம் இருந்து ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது  ஐதீகம். 

புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை தசரதனுக்கு பெருமாள் உபதேசம் செய்த இடம். தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோயிலில் உள்ளது.  பல நூற்றாண்டுகளாக இருக்கும் (பெருமாள் காட்சி தந்தாக கூறப்படுகிற) அரசமரம் 
 
பாடல் பெற்ற பாலம் : ராமர், இலங்கை செல்ல பாலம் அமைத்ததால் இத்தலம் மிகவும் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். தவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ளசேது பாலம் பற்றி பாடியுள்ளனர். பஞ்ச தரிசனம்பூரி தலத்தில் பாதியளவே (சிலையின் அளவு) காட்சிதரும் ஜெகந்நாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் "தட்சிண ஜெகந்நாதம்' என்று அழைக்கப்படுகிறது. ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர்  என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

நரசிம்மர் : பொதுவாக மகாலட்சுமியை மடியில் இருத்தி காட்சி  தரும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். புராதனமான கோயில்களில் மட்டுமே காணக்கூடிய அமைப்பு இது. நரசிம்மரின் இந்த தரிசனம் விசேஷமானது. தவிர, ஜெகந்நாதர் சன்னதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு சந்தன காப்பிட்டு வழிபடுகிறார்கள்.

மனைவியுடன் கடலரசன் : ராமர், கடலில் பாலம் கட்ட அனுமதி வேண்டியபோது, கடல் அரசன் முதலில் அவர் முன் தோன்றவில்லை. எனவே, ராமர் கடல் மீது பாணம் எய்ய முயன்றார். இதனால் பயந்துபோன கடலரசனான சமுத்திரராஜன், மனைவி சமுத்திர ராணியுடன் தோன்றி அவரை சரணடைந்தான். இவர்கள்  இருவரும் சயனராமர் சன்னதி முன்மண்டபத்தில் இருக்கின்றனர். அருகில் ராமருக்கு உதவிய விபீஷணனும் இருக்கிறார். ககன், சாரணன் என இரண்டு தூதர்களை ராவணன் இங்கு அனுப்பி ராமனை வேவு பார்க்கச் சொன்னான். ராமனைக் கண்டதும் அவர்கள் அவரைச் சரணடைந்தனர். மூலஸ்தானத்திற்குள் ராமர் பாதத்தின் அருகில் வணங்கியபடி இவர்கள் இருக்கின்றனர்.

சேதுக்கரை : திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் சேதுக்கரை உள்ளது. ராமர் இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைத்தார். சேது என்றால் அணை. அணை கட்டிய இடத்திலுள்ள கரை என்பதால் தலம் சேதுக்கரை என பெயர் பெற்றது. இங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் இருக்கிறது. இவர், இலங்கையை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள கடல், "ரத்னாகர தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. சித்திரை, பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது சுவாமி இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். அமாவாசை நாட்களில் இங்கு பிதுர் தர்ப்பணம் செய்கிறார்கள்.

சேர்த்தி தாயார் : பொதுவாக பெருமாள் தலங்களில் சுவாமி, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தாயாருடன் இணைந்து (சேர்த்தி)காட்சி தருவார். ஆனால், இங்கு சுவாமி வெள்ளிதோறும் தாயாருடன் காட்சி தருகிறார். அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.

மர வடிவில் மகாவிஷ்ணு: பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில், "மரங்களில் நான்அரசமரமாக இருக்கிறேன்' எனச் சொல்லியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற அரச மரமே இத்தலத்தின் விருட்சமாகும். இந்த மரம் சுவாமி சன்னதிக்குப் பின்புறம் உள்ளது. பக்தர்கள் இதை மகாவிஷ்ணுவாக கருதி வழிபடுகிறார்கள்.

பட்டாபிராமன்: சீதையை மீட்டு ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த ராமர், இங்கு  சுவாமியைத் தரிசித்துச் சென்றார். இவர் பட்டாபிராமனாக சீதை, லட்சுமணருடன் கொடி மரத்துடன் கூடிய சன்னதியில் காட்சி தருகிறார்.  சித்திரை மாதத்தில் இவருக்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.வெற்றி பெருமாள் இத்தலம் வந்த ராமர், சீதையை மீட்க அருளும்படி ஜெகந்நாதரிடம் வேண்டினார். சுவாமி அவருக்கு ஒரு பாணம் கொடுத்தார். ராமன், அந்த பாணத்தை பிரயோகித்து ராவணனை அழித்தார். இதன் அடிப்படையில் எச்செயலையும் துவங்கும்முன்பு, ஜெகந்நாதரை வேண்டிக்கொண்டால் அது வெற்றி பெறும் என்கிறார்கள்.இந்த சுவாமிக்கு, "வெற்றி பெருமாள்' என்றும் பெயருண்டு. ராமர் வழிபட்டதால் இவர் "பெரிய பெருமாள்' என்றும் பெயர் பெறுகிறார்.

சங்கீத மூர்த்திகளான தியாகராஜர், முத்துச்சாமி ஆகியோர் இத்தலத்து சுவாமி பற்றி கீர்த்தனைகள் பாடியுள்ளனர். அரிச்சந்திர புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபம் கோயில் எதிரே உள்ளது. காசி, ராமேஸ்வர தீர்த்த யாத்திரை செல்லும் பக்தர்கள் சேதுக்கரையில் தீர்த்த நீராடி யாத்திரையை முடிக்கின்றனர்.  ராமனை உபசரித்த பரத்வாஜர், இங்கு  சுவாமியை வழிபட்டுள்ளார்.
 
திருப்புல்லாணி! ராமநாதபுரத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள ஊர். ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் பெருமாளை உள்ளம் உருக வழிபட்டு வாருங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையிலும் சர்வ மங்கலங்களும் ஸித்திக்கும். இது சத்தியம்!
 
பின்னே.... பெருமாளும், அவர்தம் தேவியாரும், அவர் குடியிருக்கும் கோயிலின் விமானமும்கூட... திருப்பெயரில் கல்யாணம் எனும் மங்கலத்தைத் தாங்கியிருக்கும் அற்புத ÷க்ஷத்திரம் அல்லவா இது! ஆமாம்.... இவ்வூர் பெருமாளுக்கு ஸ்ரீகல்யாண ஜகந்நாதன் என்று பெயர். திருக்கோயிலின் விமானமோ கல்யாண விமானம். தாயாரின் திருப்பெயரோ ஸ்ரீகல்யாணவல்லி! பிறகென்ன.. சர்வ மங்கலங்களும் நமக்கு ஸித்திக்க, இங்கே தடையேது?
 
இலங்கையை அடைய சமுத்திரத்தைக் கடந்தாக வேண்டும். அதன்பொருட்டு கடலரசனை வேண்டிக்கொள்ள ஸ்ரீராமன் தர்ப்ப சயனம் செய்தார். அவரின் திவ்ய திருமேனியை தர்ப்பை புற்களால் தாங்கி பெரும் புண்ணியம் கட்டிக்கொண்ட ஊர் இது, ஆகவே திருப்புல்லாணி என்று பெயர் வந்தது.
 
இந்த ஆதிசேதுவுக்கு வேறொரு சிறப்பும் உண்டு. அது இங்கிருக்கும் அரச மரம். மிகப் பழமையான இந்த அரச மரத்தை, போதி என்று பக்தியோடு அழைத்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். இதன் அருகில் இருக்கும் மேடையில் நாகப் பிரதிஷ்டை செய்து, மனதார வேண்டிக் கொண்டால் பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் அந்தப் பாக்கியம் கிடைக்கும் என்பது இங்கே ஐதீகம்.
தலபுராணம் என்ன சொல்கிறது தெரியுமா?
ஆதியில் படைப்புத் தொழிலை தாமே செய்து வந்த பரம்பொருள், பிறகு அதற்கென்று ஒரு கர்த்தாவாக பிரம்மனைப் படைத்தது, தொடர்ந்து நவ பிரஜாபதிகளையும், இந்திரனையும் தோற்றுவித்தது. பிறகு பிரம்மனிடம் சிருஷ்டி தொழிலை ஒப்படைத்தது. சிருஷ்டியைத் துவங்க தெற்கு நோக்கிப் புறப்பட்டார் பிரம்மா. அப்போது ஆயிரம்கோடி சூரியப் பிரகாசத்துடன் ஜோதி ஒன்று தோன்றி மறைவதைக் கண்டார். அந்த ஜோதியின் ரகசியம் என்ன என்று விசாரித்தபோது, அதுவே போத ஸ்வரூபமான போதி மரம். அந்த மரத்தடியில் தான் ஜகந்நாதன் தங்குகிறான் என்று அசரீரியாய் பதில் கிடைத்ததாம். 
 
     
  தல வரலாறு:
     
  72 சதுர் யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோயில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அகம் மகிழ்ந்த பெருமாள் அரச மரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார். அதைக் கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்டினர். உடனே மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள இத்திருத்தலம். பிற்காலத்தில் தாயார் பத்மாசனிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது.தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீ ராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம் . பல நூற்றாண்டுகளாக இருக்கும் (பெருமாள் காட்சி தந்தாக கூறப்படுகிற) அரசமரம் .
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar