Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர்
  அம்மன்/தாயார்: அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி
  தல விருட்சம்: வெப்பால மரம்
  தீர்த்தம்: சித்த, சொர்ண, காருண்ய தீர்த்தம், சீர புஷ்கரிணி
  ஆகமம்/பூஜை : வைகானஸம்
  புராண பெயர்: நீர்மலை, தோயாத்ரிகிரி
  ஊர்: திருநீர்மலை
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

மங்களாசாசனம்


திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்


அன்றாயர் குலக்கொடி யோடனிமா மலர் மங்கை யொடளப்பளாவி அவுணர்க் கென்றானு மிரக்க மில்லாதவனுக் குறையு மிடமாவது, இரும்பொழில் சூழ் நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர் நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மாமலையாவது நீர்மலையே.

-திருமங்கையாழ்வார்



 
     
 திருவிழா:
     
  சித்திரையில் பிரம்மோற்சவம் 10 நாட்கள், வைகாசி வசந்த உற்சவம், ஆனி கோடை உற்சவம், புரட்டாசி சனி பவித்ர உற்சவம் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 62 வது திவ்ய தேசம்.இத்தலத்தில் பெருமாளின் நான்கு கோல தரிசனம் காணலாம். இங்கு நரசிம்மர் பால நரசிம்மராக காட்சி தருகிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள், ஸ்ரீரங்க நாதப் பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை- 600 044 காஞ்சிபுரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 44-2238 5484,98405 95374,94440 20820. 
    
 பொது தகவல்:
     
  இது ஒரு மலைக்கோயில் ஆகும். மலையிலும், கீழேயும் இரண்டு பெரிய கோயில்கள் அமைந்துள்ளன. பெருமாள் நான்கு நிலைகளில், மூன்று அவதார கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்திற்கு 3 ஏக்கர் பரப்பளவில் நடுவில் நீராழி மண்டபத்துடன் அழகிய தெப்பக்குளம் உண்டு. இக்குளம் சுத்த புஷ்கரணி, ஷீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸ்வர்ண புஷ்கரணி என அழைக்கப்படுகிறது. வைகானச ஆகம விதிப்படி இரு வேளை பூஜை நடக்கிறது. ராமர் தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  இத்தலத்தின் குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். அத்துடன் சித்தம் தெளிந்து சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணத்தடை நீங்க பெண்கள் கிரிபிரதட்சணம் செய்தும் வழிபடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

நீர்' பெருமாள்: ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அவர் இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தார். பெருமாள் அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். அப்போது வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமாக தங்கும்படி வேண்டினார். சுவாமியும் அவ்வாறே அருளினார். இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் என்றும், தலத்திற்கு திருநீர்மலை என்றும் பெயர் ஏற்பட்டது. நீல நிற மேனி உடையவர் என்பதால் இவருக்கு "நீலவண்ணப்பெருமாள்' என்ற பெயரும் உண்டு. ராமபிரானுக்கும் சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி சுயம்புவாக தோன்றிய வால்மீகி காட்சி தருகிறார்.


ஒரே தலத்தில் நான்கு பெருமாள்: இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார். தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர்.


குழந்தை நரசிம்மர்: நரசிம்மரை உக்கிரமான கோலத்தில் தரிசித்திருப்பீர்கள். அவரை சாந்தமாக, பால ரூபத்தில் இத்தலத்தில் தரிசிக்கலாம். இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே, சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். இவரை "பால நரசிம்மர்' என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம். 


கோபுரம் ராமருக்கு... கொடிமரம் நீர்வண்ணருக்கு...: கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே உள்ளது. வால்மீகிக்காக ராமராகவும், நீர்வண்ணப்பெருமாளாகவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகின்றனர். எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமாக ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் தாயாரை, "அணிமாமலர்மங்கை' எனக் குறிப்பிட்டு பாசுரம் பாடியுள்ளார். பொதுவாக பெருமாள் கோயில்களில் உற்சவர் சிலையை மூலவர் முன்பு வைப்பது வழக்கம். இக்கோயிலில் மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.


இரட்டை திருவிழா: மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார். இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார். நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்கிறது. அப்போது இவ்விருவரும் அடிவார கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர். சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர், அணிமாமலர்மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர், ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்கிறது.கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொருநாளும்  ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளுவார். ஆனால், இக்கோயிலில் ரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார். தை மாத ரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி சுற்றி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதய வேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாக தீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார்.


குளம் ஒன்று: தீர்த்தம் நான்கு: கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் 19 தீர்த்தங்கள் சங்கமித்திருப்பதாக ஐதீகம். அதுபோல், இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. சித்திரை மற்றும் பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் 9ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களில் இங்கு தீர்த்தவாரி விழா நடக்கும். துவாதசி திதி நாட்களில் தீர்த்தவாரி நடப்பதால் இந்த நிகழ்ச்சியை, "முக்கோட்டி துவாதசி' என்று அழைக்கிறார்கள்.


பெருமாள் கோயில் கிரிவலம்: தானாக தோன்றிய எட்டு பெருமாள் தலங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. இவை, "ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்' எனப்படும். இதில் திருநீர்மலையும் ஒன்று. ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருப்பதி, வட மாநில கோயில்களான சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய ஏழும் பிற தலங்கள் ஆகும். மலையில் அமைந்த கோயில் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் கிரிவல வைபவம் விசேஷமாக நடக்கிறது.இம்மலைக்கு "தோயாத்ரிமலை' என்ற பெயரும் உண்டு. தோயம் என்றால் "பால்' எனப்பொருள். சுவாமி தோயகிரி விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். சனிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது இவருக்கு புஷ்பாங்கி அலங்காரம் செய்கின்றனர்.


 
     
  தல வரலாறு:
     
  ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர். எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர். அப்போது சுவாமி "போக சயனத்தில்' ரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் தைலக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று இத்தத்தில் பெருமாளின் நான்கு கோல தரிசனம் காணலாம். இங்கு நரசிம்மர் பால நரசிம்மராக காட்சி தருகிறார்
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar