Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்)
  அம்மன்/தாயார்: காமாட்சி (ஏழவார்குழலி)
  தல விருட்சம்: மாமரம்
  தீர்த்தம்: சிவகங்கை
  ஊர்: காஞ்சிபுரம்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்

பண்டு செய்த பழவினையின் பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே வண்டுலா மலரச் செஞ்சடை யேகம்பன் தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.

 
     
 திருவிழா:
     
  பங்குனி உத்திரம் பெருவிழா - 13 நாட்கள் நடைபெறும் - வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள். கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501.  
   
போன்:
   
  +91- 44-2722 2084. 
    
 பொது தகவல்:
     
  மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.

இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.
 
     
 
பிரார்த்தனை
    
  இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.

சுந்தரரருக்கு அருள்: கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.

பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.

சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.

தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் - ஊன்றுகோல் , காஞ்சி - இடக்கண், திருவாரூர் - வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.

ஒற்றை மாமரம் : ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.

அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.

இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.

நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்):
திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.
 
     
  தல வரலாறு:
     
  கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.

இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar