Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: விஸ்வநாத சுவாமி
  அம்மன்/தாயார்: வேதாந்த நாயகி
  தல விருட்சம்: வன்னி, வில்வம்
  தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்
  புராண பெயர்: தேவராஜபுரம்
  ஊர்: தேப்பெருமாநல்லூர்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நவராத்ரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில், தேப்பெருமாநல்லூர், கும்பகோணம் தஞ்சாவூர்.612 204 மின்னஞ்சல்: raghuthirunakeswaram@tnhrce.org  
   
போன்:
   
  +91 435 2463354 
    
 பொது தகவல்:
     
  இக்கோயிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோயில் திறக்கப்படுகிறது. சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது படர்வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம்போல் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப்படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடும்.

இங்குள்ள வேதாந்த நாயகி சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் கன்னி மூலையில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார் கபால கணபதி. அது என்ன கபால கணபதி? இந்த கணபதியின் கண்கள் யானை முகத்திற்கு உள்ளது போல் முகத்தின் பக்கவாட்டில் இல்லாமல், மனிதர்களுக்கு இருப்பது போல் முகத்தின் நடுவில் உள்ளது. மேலும், இவரது கை, கால் விரல்கள் மனித விரல்களைப் போல் நீண்டுள்ளது. இடுப்பில் கபால மாலையை அணிந்திருக்கிறார் இவர். ஒரு மகாபிரளய காலத்தில், இந்தப் பூவுலகமே நீரில் அமிழ்ந்தபோது, இத்தலம் மட்டும் மூழ்காமல் வெளியே தெரிந்தது. இதனைக் கண்டு திகைத்த நான்முகன், தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விநாயகரை தியானித்தார். அவர் முன் தோன்றிய விநாயகர், இத்தலம் புனிதமானது. இங்கே சிவபெருமான் எழுந்தருளப்போகிறார். மறுபிறவி இல்லாத புனிதருக்குதான் இத்தல ஈசனை வழிபடும் பாக்கியம் கிட்டும். ஈசனுடன் அன்னையும் நானும் இத்தலத்தில் எழுந்தருள்வோம். அப்போது என் கண்கள், மனித கண்கள் போல நேராகக் காட்சி தரும்; என் நகங்கள், நரம்புகள் எல்லாம் மனித உறுப்புகள் போலவே இருக்கும்.

அந்த வேளையில் அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடு மாலைகளாக மாற்றி என் இடுப்பில் ஒட்டியாணமாக அணிவேன். என்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களை நிவர்த்தி செய்து சகல பாக்கியங்களையும் அளிப்பேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்த கபால விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்யும் போது அவரது இடுப்பில் உள்ள கபால ஒட்டியாணத்தை தரிசிக்கலாம். மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை. பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார். இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது.

இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன் என்று ஆறுதல் கூறினார். அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள். கோயிலின் தெற்குப் பகுதியில் உள்ள சன்னிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இக்கோயிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் கோயிலிற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவன் கோயிலிற்கு அருகில் பெருமாள் கோயில் உள்ளது. இந்தப் பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதியர் அங்கே வருகை தருவது வழக்கம். இக்கோயிலிலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார். அவருக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள்புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள். கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  இங்குள்ள சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். இங்குள்ள அன்னதான தட்சிணாமூர்த்தி திருதியை பார்த்திருப்பதால் குருதோஷ, ராகு தோஷ, கேது தோஷ நிவர்த்தி சொரூபமாக இச்சேத்திரத்தில் இருக்கிறார். அன்னதான தட்சிணாமூர்த்தியை அனைத்து வகையான ஜீவராசிகளும், அனைத்து வகையான சர்ப்பங்களும் பூஜை செய்ததால் ஷர்ப தோஷங்களும் நிவர்த்தியாகும். சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். கபால விநாயகரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேதாந்த நாயகி அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். அன்னதான தட்சிணாமூர்த்திக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும். 
    
 தலபெருமை:
     
  மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சன்னிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி. நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வையால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்?  சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள். எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார். அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து, என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா? என்று கேட்டாள்.

சனி பகவான், நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்த தல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம் என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார். இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
 
     
  தல வரலாறு:
     
  மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப்படுகிறது. மிகவும் பழமையானது இத்திருக்கோயில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர். யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோயிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் உலகமே ஜலபிரளயம் ஆகிறது. இந்த காலத்தில் இந்த சேத்திரம் மட்டும் ஒரு சொட்டு ஜலம் இல்லாது தனியாக தெரிகிறது. அச்சமயம் பிரம்மா இச்சேத்திரத்தில் வந்து இறங்குகிறார். அவர் எடுத்து வைக்கும் காலடி ஒவ்வொன்றிலும் புஷ்பமாக மலர்கிறது. குழப்பத்தில் ஞான திருஷ்டியில் பிரம்மா பார்க்கிறார். அவருக்கு புலப்படவில்லை. இந்த சேத்திரத்தில் விஸ்வநாத சுவாமியை தரிசனம் செய்கிறார். அப்போது சுவாமி ஜோதிலிங்கமாக காட்சி கொடுக்கிறார். சுவாமியிடம் பிரம்மா இச்சேத்திரத்தின் மகிமையை பற்றி கேட்கிறார். சுவாமி இச்சேத்திரத்தை பற்றி தெரிய வாய்ப்பில்லை என கூறுகிறார். மீண்டும் மகாவிஷ்ணுவிடம் சென்று சேத்திரத்தை பற்றி கேட்கிறார்.

மாயரூபம், மனிதரூபம், மிருகரூபம் என மூன்று அவதாரம் எடுத்தால் தான் இதன் மகிமையை தெரிந்து து கொள்ளலாம் என்று மஹாவிஷ்ணு கூறினார். பிரம்மா மகா கணபதியிடம் சென்று இதன் மகிமையை பற்றி கேட்கிறார். கணபதி பரமேஸ்வரனின் உத்தரவு இன்றி இச்சேத்திரத்தின் மகிமையை சொல்ல இயலாது என்று கூறினார். பிரம்மா இச்சேத்திரத்தின் மகிமையை தெரிந்து கொள்ள மகா கணபதியை நோக்கி தவம் செய்கிறார். அப்பொழுது ஜலம் பிரளயம் ஆனது. மேலும் கொந்தளிக்க ஆரம்பித்தது. பரமேஸ்வரன் மகாகணபதியிடம் வந்து இச்சேத்திரத்தின் மகிமையை பற்றி பிரம்மாவிடம் சொல்ல சொல்கிறார். உடனே மகாகணபதி இங்கு மூன்று அவதாரம் எடுக்கிறார். மாயரூபமாக மனிதரூபமாக மிருகரூபமாக இந்திரன் ஆஞ்சி என்று சொல்லக்கூடிய அஸ்டதிக் பாலகரை மண்டை ஓடாக மாற்றி தன்னுடைய இடுப்பில் அணிந்து கொள்கிறார். இப்படி மூன்று அவதாரம் எடுத்து இந்த சேத்திரத்தின் மகிமையை பற்றி பிரம்மாவிடம் சொல்கிறார்.

இந்த சேத்திரமானது ஆதிசக்தியினுடைய நுட்பங்கள் நிறைவுற்று காணப்படும். ஆதிசக்தி என்பவள் (மாயாநிதி) மிகக்கடுந்தவத்தை தன்னுடைய தவ வலிமையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களையும் மாயத்தின் மூலமாக தவம் செய்து தவ வலிமையினால் ஒரு குடத்தில் அனைத்து தெய்வங்களின் வலிமைகளையும் அவர் கனம் செய்து அடைக்கிறார். மாயாநிதி உலகத்தில் தன்னுடைய ஆட்சி புரிகிறார். கிரேதாயுகம், திரேத்தாயுகம் என்று சொல்லக்கூடிய இரண்டு யுகம் ஆட்சி செய்கிறார். என்னவாக இருந்தாலும் மாõயநிதியும் ஒரு பெண்தான் தன்னுடைய ஆசாபாசங்களை அடக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் இருந்து மகாகணபதியை வெளியில் எடுக்கிறார். அப்பொழுது மகா கணபதி அம்மா, தாயே என்று கூறினார். அதை கேட்ட மாõயநிதி தாய் உணர்வை கொடுத்துவிட்டான் என்று அம்மாள் மகா கணபதியை ஓரத்தில் நகர்த்தி வைக்கிறாள். மேலும் மகாவிஷ்ணு அக்குடத்தில் இருந்து வெளியில் எடுக்கிறாள்.

மகாவிஷ்ணுவை தங்கையே என பாச உணர்வை கொடுக்கிறார். மாயாநிதி அவரையும் நகர்த்தி வைக்கிறாள். இப்பொழுது பரமேஸ்வரனை வெளியில் எடுக்கிறார். பரமேஸ்வரன்னோ காமாந்த லோகெ, நாமாந்த ரூபே என்று காமத்தை பற்றி பாடினார். மாயாநிதி இவர்தான் நமக்கு தகுந்த ஆள் என்று சொல்லி மறுநாள் காலை என்னுடைய அறைக்கு வந்து விடு என்று சொல்லி செல்கிறாள். மறுநாள் காலை மாயாநிதியினுடைய அறைக்குள் செல்கிறார் பரமேஸ்வரன். மாயாநிதியிடம் நான் உனக்கு இணங்க வேண்டும் என ஆசைப்பட்டால் எனக்கு அடிமை என ஓலை எழுதி கொடு என கேட்கிறார். அனைத்து மாய சக்தியும் அறிந்த மாயாநிதி பாதரசத்தில் நான் உனக்கு அடிமை என எழுதி ஓலை சுவடியாக அதை மாற்றி பரமேஸ்வரனிடம் கொடுக்கும் பொழுது நான் இதை மேலிருந்து பூமியின் கீழே விடுவேன். அதை ஒரு சொட்டு கூட கீழே விழாமல் பிடித்துக் கொண்டால் நான் உனக்கு அடிமை என ஒப்புக்கொள்கிறேன். என மாயாநிதி கூறினார். அவள் மேலிருந்து பாதரசத்தை கீழே எறிகிறாள். அதை பரமேஸ்வரன் தன்னுடைய கையில் பிடித்தார். அந்த பாதரசம் நான்கு பக்கமாக சிதறியது.

கடைசியில் ஒரு துளி பரமேஸ்வரனின் முழங்காலில் தட்டி பாதரசம் பூமியை வந்தடைந்தது. மாயாநிதியா சிரித்து கொண்டு இருந்தால் உடனே பரமேஸ்வரன் தன்னுடைய நெற்றிக்கண்ணை திறந்து மாயாநிதியை பஸ்பம் (சாம்பல்) ஆக்குகிறார். அந்த மாயாநிதியினுடைய பஸ்பமும், பாதரசமும் சேர்ந்த இடமே இது தேவராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு பிரம்மாவிடம் இந்த மகிமையை மகா கணபதி சொன்னார். ஒரு சமயம் பரமேஸ்வரன் இச்சேத்திரத்தில் விஸ்வரூபம் எடுக்கிறார். உலகமே பிரளயத்தால் ஆடியது. அப்போது சாட்சாத் பார்வதி தேவியே நான்கு வேத மந்திரங்களை சொல்கிறார். வேதாந்த நாயகி என்ற பெயர் அம்பாளுக்கு உண்டானது. மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தாள் அம்பிகை. அம்பாளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபியானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித்தால் அந்தப் பாவம் நீங்கும் என்று கூறினார். உடனே பரமேஸ்வரன் வாயினால் மந்திரகோசம் சொல்ல சவராஷ்டெசோமநாத இஞ்ச ஸ்ரீசைனயம் மல்லிகா அர்ஜினம் உட்ஜை இன்னியம் மகாகாலம், ஓம் காலம், அமலேஸ்வரம், பிரலியாம் வைத்திய நாதஞ்சடாகின்யம் பிழ சங்காரம் சேது வந்தேது-ராமேஸம் நாகேசம், தாருகாவனம் வாரனாகியாந்த விஸ்வேசம் திரயம்பாகம் கவுதமிதடே இமால ஏது கேதாரம் குஞ்சிமே சந்த சிவாலயே ஏதானி ஜோதிலிங்கானி காயம் பிராத்த படே நாகாரை, சப்த சம்ப கிருதம் பாவம்-ஸ்நரேஜ வினச்சை. என்று சொல்லி ஜோதிலிங்க பரமேஸ்வரர்களை இங்கு வரவழைத்தார்.

இதனைக் கண்ட நாரதர், இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்! என்று போற்றிப் புகழ்ந்தார். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும் என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர்லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சன்னிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது. இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் விசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தியருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர்களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள் என்றார். மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும் என்று சாபமிட்டார்.

அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார். சாந்தமடைந்த அகத்தியர், மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர் என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார். உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் விஸ்வநாத சுவாமி கோயிலிற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, இதுவரை ருத்திராட்சத்தை கொண்டு யாருமே அர்ச்சனை செய்தது கிடையாது. ஆகையால் நாம் அதை கொண்டு அர்ச்சனை செய்வோம் என்று 1 முகம் முதல் 21 முகம் வரை அர்ச்சனை செய்தார்.

சுவாமி மணம் குளிர்ந்து காட்சி கொடுத்து சாபவிமோசனம் செய்தார். மேலும் மகரிஷியிடம் வேண்டும் வரம் கேட்டார். எப்போது மகரந்த மகரிஷி தன்னுடைய இருதய நரம்பை எடுத்து சுவாமியின் மேல் லிங்கமாக ரேகை போட்டார். அதன் பிறகு நான் எந்த நேரமாக இருந்தாலும் சிவபூஜையை தவிர வேறு எந்த பூஜையும் செய்யமாட்டேன் என்று ஆத்மார்த்தமாக கூறினார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். இந்தக் கவசத்தினைத் தயார் செய்ய உதவியவர் திருச்சியைச் சேர்ந்த பக்தர். சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar