Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பட்டீசுவரர்
  அம்மன்/தாயார்: பல்வளைநாயகி, ஞானாம்பிகை
  தல விருட்சம்: வன்னி
  தீர்த்தம்: ஞானவாவி
  புராண பெயர்: மழபாடி, பட்டீஸ்வரம், பட்டீச்சுரம்
  ஊர்: பட்டீஸ்வரம்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்



பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார் துறவியெனும் உள்ளமுடை யார்கள் கொடி வீழியழ காயதொகுசீர் இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலாய் நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவரே.



திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 23வது தலம்.



 
     
 திருவிழா:
     
  ஆனி - முத்துப்பந்தல் விழா - ஆனிமாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பூத கணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும்.இதுவே இத்தலத்தின் சிறப்பு விழா. முத்துப்பந்தல் விழா நாளில் பகல் 12 மணிக்கு திருஞானசம்பந்தர் அடியார்களுடன் திருச்சத்திமுற்றம் கோயில் சன்னதியிலிருந்து முத்துப்பந்தல் நிழலில் எழுந்தருளி, பட்டீச்சரத்துக்கு வருதலும், பதிகம் பாடுதலும், திருமடத்துக்கு எழுந்தருளுதலும் ஆகிய காட்சிகள் நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அளித்து முத்துப்பந்தல் நிழலில் வரும் அழகைக்காண நந்தியை விலகி இருக்கும்படி பணித்த தலம். இங்கு துர்க்கை சாந்த சொரூபியாக , மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன்,இடப்புறம் நோக்கிய சிம்ம வாகனத்துடன் அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.விசுவாமித்திர முனிவருக்கு காயத்திரி மந்திரம் சித்தி பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இத்தலத்தில் தான் என்கின்றனர். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 86 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 435- 2416976. 
    
 பொது தகவல்:
     
  அஷ்டபுஜங்களுடன் அருள் பாலிக்கும் இவ்வன்னையை விஷ்ணு துர்க்கை, துர்க்கா லட்சுமி எனவும் அழைப்பர். நவசக்தி நாயகி, நவரத்ன நாயகி, நவயோக நாயகி, நவகிரக நாயகி , நவராத்திரி எனவும் போற்றப்படுகிறாள்.  
     
 
பிரார்த்தனை
    
 

*இங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் ராகு கேது செவ்வாய் தோசங்கள் நீங்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கப் பெறலாம். ராகு கால நேரங்களிலும் முக்கியமாய் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுகிறார்கள்.


*இத்தலத்து பைரவர் மிகவும் விசேசமானவர். சத்ரு தோசம், பிணிநீக்கம், விஷக்கடி, நாய்க்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பைரவரை வழிபட்டு பலன் அடைகிறார்கள்.


*இத்தலத்து பட்டீசுவரனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  *துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்துகிறார்கள். எலுமிச்சை விளக்கு ஏற்றுகிறார்கள்.அம்மனுக்கு புடவை சாத்தியும் தங்கள் நேர்த்திகடனை செய்கிறார்கள். *பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று பைரவாஷ்டமி அபிசேகம் செய்கிறார்கள். *சுவாமிக்கு வஸ்திரம் சாத்துகிறார்கள்.அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்கள்.சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திரவியப்பொடி, மாப்பொடி, எண்ணெய்,தேன் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். கார்த்திகை சோம வாரம் சுவாமிக்கு 1008 சங்காபிசேகம் செய்கிறார்கள். இவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்கிறார்கள். *மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

மாமன்னன் இராஜராஜ சோழன் முதலான சோழ மன்னர்கள் அனைவராலும் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யப்பட்ட அம்பிகை இவளே. ஒரு நூற்றாண்டுகளுக்கு மேலாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டீசுவரத்தின் வடபுறம் அமைந்திருந்த சோழன் மாளிகையில் சோழ மன்னர்களின் அரண்மனைக் காவல் தெய்வமாக அருள் பாலித்து வந்த தெய்வம்.  அரண்மனையின் வாயில்களில் முறையே விநாயகரும் முருகரும் பைரவரும் எழுந்தருளி அருள்பாலித்து வந்தனர். சோழமன்னர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும் வெற்றி வாகை சூட போர்க்களம் புகும்போதும் இந்த தேவியின் அருள் வாக்கு பெற்ற பின்னரே செயல்படுவர்.


சோழ ராஜ்ஜியம் முடிவுக்கு வந்த பின்னர் துர்க்கையம்மனை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த துர்க்கை மற்ற தலங்களில் இருப்பது போல் அல்லாமல் சாந்த சொரூபியாக இருக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது. அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள்பாலிக்கிறாள்.


*திருஞான சம்பந்தர் முத்துப்பந்தல் பெற்றது: திருஞானசம்பந்தர் சிவாலயங்கள் தோறும் சென்று வழிபட்டு வரும் நேரத்தில் திருச்சத்திமுற்றத்தில் வழிபட்ட பின் இத்தலத்துக்கு வந்தார்.அப்போது வெயில் காலமாதலால் சூரியனின் கதிர்கள் சுட்டெரித்தன.


வெயிலின் கொடிய வெப்பத்தை தணிக்க இத்தலத்து பட்டீசர் பூதகணங்கள் மூலமாய் அழகிய முத்துப்பந்தலை அனுப்பி வைத்தார். ஞானசம்பந்தர் இறைவன் அருளை வியந்து பணிந்து போற்றி முத்துப்பந்தலின் நிழலில் வந்தார். ஞானசம்பந்தர் நடந்து வந்த அழகிய காட்சியை காணவும், திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்கவும் பெருமான் நந்தி தேவரை விலகி இருக்க கட்டளையிட்டார். நந்தியும் விலகியது.


ஞானசம்பந்தர் பரவசத்தில் இறைவனை வணங்கி ஆனந்தப்பெருவெள்ளத்தில் பாடல் மறை எனத்தொடங்கும் பாமாலையை பாடி தலத்தில் தங்கினார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் ஆனிமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.


* காமதேனுப்பசுவின் புத்திரி பட்டி பூசித்ததால் பட்டீச்சரம் என்று பெயர் ஏற்பட்டது.


*ராமருக்கு சாயகத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலம்.


*பராசக்தியே தவம் செய்து வழிபட்ட தலம்.


*மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்தில் உள்ள ஞான வாவியின் துளி பட்டமையால் சாபம் நீங்கப் பெற்றது இத்தலத்தில்தான்.


*துர்க்கையம்மன் மிகவும் சக்தியுள்ள தேவதையாய் விளங்குவதால் வெளியிடங்களிலிருந்தும் பலர் தங்கள் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.


*நாயக்கர் கால கலை அம்சம் பொருந்தியகோயில் இது.


*மராட்டியர் கால ஓவியங்கள் கோயிலில் காணப்படுகின்றன.


*மிகவும் பழமையான கோயில் இது.


 
     
  தல வரலாறு:
     
 

பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர்.தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது. தேவியாரின் தவத்திற்கு உவந்து பெருமான் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்குக் கபர்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.


இவ்வனத்தின் பெருமையையும், தூய்மையையும் பட்டி உணர்ந்ததால் தானும் பெருமானை பூஜிக்க விரும்பி மணலினால் ஓர் லிங்கம் அமைத்து நாள்தோறும் விதிப்படி பூசித்து வந்தது. தனது தூய்மையான பாலைக் கொண்டும், ஞானவாவியின் நீரைக் கொண்டும் நீராட்டி வழிபட்டது. பெருமான் அவ்வழிபாட்டிற்கு மகிழ்ந்து மணலினால் ஆகிய லிங்கத்தில் என்றும் நிலையாய் அமர்ந்தருளினார். பட்டிக்கன்று வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar