Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கைலாசநாதர்
  அம்மன்/தாயார்: பார்வதி
  ஊர்: கூனஞ்சேரி
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்து பலனடைவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கூனஞ்சேரி, தஞ்சாவூர்.  
   
போன்:
   
  +91 9843138641 
    
 பொது தகவல்:
     
 

வெளிப்பிரகாரத்தில் அஷ்டாவக்கிரன் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. இவர்கள் தவிர, அழகு மிகுந்த ஜடாமகுட சௌர்ந்தர்ய நாயகி என்று அழைக்கப்படும் அம்மன் சன்னதியும் உள்ளது.


இத்திருக்கோயிலின் வடக்கு பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம், பைரவ மூர்த்தியின் கருணைப் பார்வையுடன் எட்டு சிவலிங்க திருமேனிகள் அஷ்டா வக்கிரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனவாய்

அட்டமூர்த்தி அழகன் என திருமுறைகள் சிவபெருமானை புகழ்ந்து போற்றுகிறது. பஞ்சபூதங்கள் சூரிய, சந்திரன் மற்றும் ஆன்மா ஆகியன அட்ட மூர்த்தங்களாகும். இவை எட்டின் வகையில் இறைவன் திருக்காட்சி தருகின்றார் என்பதே அட்டமூர்த்தி என்பதன் பொருள்.

1. பிருத்வி லிங்கம்
2. அப்பு லிங்கம்
3. அக்னி லிங்கம்
4. வாயு லிங்கம்
5. ஆகாச லிங்கம்
6. சூரிய லிங்கம்
7. சந்திர லிங்கம்
8. ஆத்ம லிங்கம் என்பன அட்ட லிங்கங்களாகும்.
 
     
 
பிரார்த்தனை
    
  உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கும்பகோணத்தையடுத்து சுவாமிமலையிலிருந்து திருவைகாவூர் செல்லும் வழியில் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆதனூர், புள்ளப்புதங்குடி என்ற இரு வைணவத் திருப்பதிகளுக்கு இடையேயுள்ள இந்தத் திருத்தலத்தில் மூலவராக கைலாசநாதர் அருள்பாலிக்கிறார். அவரே அஷ்டா வக்கிரனின் குறைகளைக் களைந்தவர். அன்னையின் திருநாமம் பார்வதி.

முதலில் விநாயகரை முதல் அஷ்டமியன்று வழிபாடு அர்ச்சனை செய்து வழிபடவும். 2வது அஷ்டமிக்கு கைலாசநாதரை வழிபடவும், 3வது அஷ்டமி முதல் அஷ்டலிங்கங்களை வரிசையாக வழிபட்டு கடைசியாக அஷ்டமிக்கு (அதாவது 11வது அஷ்டமிக்கு பார்வதி அம்பாளை வழிபட்டு வந்தால் உடலில் உள்ள எல்லாவிதமான குறைகளும் நிவர்த்தியாகும். எல்லா அஷ்டமிக்கும் நேரில் வர முடியாதவர்கள் அர்ச்சகருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 11 அஷ்டமிக்கும், அர்ச்சனை, அபிஷேகம், ஹோமங்கள் மூலம் வழிபடுவது சிறந்த பயனளிக்கும்.

மேற்படி அஷ்டலிங்கங்களை (எட்டுவகை) எண்வகை மலர்களால் அர்ச்சனை செய்து, பலவிதமான நிவேதனங்களாலும், பலவிதமான பழங்களாலும் நிவேதனம் செய்து அஷ்டமியன்று விசேஷ ஹோமங்கள், விசேஷ அபிஷேகங்கள் செய்து வழிபடுவது மிகுந்த பலனளிக்கும். அபிஷேகம் செய்த எண்ணையை வாங்கி சென்று உடலில் தடவி வந்தால் தோல் வியாதிகள் குணமாகும்.

மேற்படி கோயில், அஷ்டாவக்கிரன் என்கிற அஷ்டகோண மகரிஷியால் (நரம்பு வியாதிகள் மற்றும் நரம்பு தளர்ச்சிகள்) மற்றும் உடல் ஊனங்கள் நிவர்த்திக்காகவும், புத்திரபாக்கியம் பெறவும் அஷ்டமியன்று பூஜிக்கப் பெற்ற முதன்மையான புராதான சிவஸ்தலமாகும்.

*தன் தந்தையாம் தானவ மஹரிஷி, சீடர்களுக்கு வேத மந்திரங்களைக் கற்பிக்கும் போது, அஷ்டவக்ர மஹரிஷி தன் தாயின் கர்ப்பவாசத்தில் இருந்தவாறே வேத மந்திரங்களைக் கேட்டு அரிய வேதஞானத்தை அறியப் பெற்றார். ஸ்ரீராமர் போல் பன்னிரு மாத கர்பவாசத்திற்குப் பிறகு பிறந்த அஷ்டவக்ர ரிஷி, பன்னிரெண்டு வகை உத்தம ஞானங்களுடன் ஞானயோகியாய்ப் பிறந்தவர்.

*திருவள்ளுவர் நியதித்தது பிறக்கும் போதே மறைஞானத்தோடு, வேதப்புகழோடு தோன்றிய அஷ்டவக்ர மாமுனிவர், தன் தந்தையாம் தானவ மாமுனியிடம் குருகுலவாசம் பூண்டு, தந்தையோடு இணைந்து இரு பெரும் மஹரிஷிகளாய் பன்னெடுங் காலம் கூனஞ்சேரியில் அஷ்ட பைரவ லிங்க மூர்த்திகளை நிதமும் பூஜித்து வந்தவர். பெறுதற்கரிய தம் தபோ பலன்களை தனக்காய் வைத்துக் கொள்ளாது. நாமாகிய பூலோக ஜீவன்களை கலியுகத்தில் இங்கு பூஜித்து அடைவதற்காய், கூனன்சேரி தலத்தில் பதித்து அர்ப்பணித்துள்ளார்.

*ஸ்ரீராமர் தோன்றிய திரேதா யுகக் காலத்திற்கு முன்னரேயே பூமிக்கு வந்த அஷ்டவக்ர மஹரிஷி வழிபட்ட அஷ்ட பைரவ லிங்கங்கள் தற்போதும் கூனஞ்சேரியில் உள்ளன. அருணாசலப் புண்ணிய பூமியில் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டதிக்கு (எட்டு) லிங்கங்களின் பூஜாப் பலன்கள் பலவற்றையும், அஷ்ட திக்குப் பாலகர்கள் நிதமும் வழிபடும் கூனன்சேரி சிவாலயத்தில், ஆழ்ந்த நம்பிக்கையுடன் குருவருளால் ஆற்றும் அஷ்ட பைரவ லிங்க வழிபாட்டில் பெற்றிடலாகும். இதற்காயும் அஷ்டதிக்குப் பாலகர்களை வேண்டி, அஷ்டவக்ர மஹரிஷி தம் தவம், ஜபம், பூஜைப் பலனை இத்தலத்தில் நிரவி உள்ளார். இவ்வாறாய் அஷ்டவக்ரரின் தபோ பலன்கள் என்றென்றுமாய்க் கொழிக்கும் எண்பைரவ பூமி கூனன்சேரி.

*இந்திரர் (கிழக்கு), அக்னி (தென்கிழக்கு), யமர் (தெற்கு), நிருதி (தென்மேற்கு), வருணன் (மேற்கு), வாயு (வடமேற்கு), குபேரர் (வடக்கு), ஈசான்யர் (வடகிழக்கு) ஆகிய எட்டு திக்குப் பாலகர்களும், இறை ஆணைப்படி தினமும் திருஅண்ணாமலையாம் அருணாசலத்தில் பூஜித்த பின்னர், நிதமும் குறித்த ஹோரை நேரத்தில் ஒவ்வொரு திக்குபாலகராய்ச் சூக்குமமாய் நேரில் வந்து பூஜிக்கும் பூவுலகின் ஒரே அஷ்ட பைரவ லிங்கத் தலம் கூனஞ்சேரி.

*குடும்பத்தை, வணிகத்தை நடத்துவதற்குத் தக்க மனோபலம், வைராக்கிய சித்தம், நல்ல தைரியத்தை அளிக்கும் தலம் கூனஞ்சேரி, குறிப்பாக, பிறரை நம்பி ஜீவனம், வாழ்க்கை, தொழிலை, தொழில் நடத்துவோர், எடுத்துச் செய்வதற்கு தக்க ஆள்பலம் இல்லாது தனித்து வாழ்க்கை, தொழில் நடத்துவோர் எத்தகைய ஏமாறுதலுக்கும் ஆளாகாது, தக்க காப்பு சக்திகளை அளிக்க வல்ல தலமிது.

*பைரவருக்கு உரித்தான அஷ்டமித் திதி தோறும், கூனஞ்சேரி சிவத்தலத்தில் அஷ்டலிங்கங்களையும்-வேள்வி, அபிஷேக ஆராதனை, தான தர்மங்களுடன் சத்சங்கமாய்ப் பலருடன் வழிபாடுகளை ஆற்றுவது பன்மடங்காய்ப் பலாபலன்களை வர்ஷிக்கும்.

*இயலாமை, உடல் ஊனம், கடுமையான நோய்ப் பிணி காரணமாகவும், மற்றும் வசதி இல்லாததாலும் உண்மையாகவே அருணாசல மலையை அடிக்கடி வலம் வர இயலாது ஏங்கித் தவிப்போர்-திருஅண்ணாமலையின் அஷ்டதிக்கு லிங்கங்களையும் தரிசித்த பலன்களைக் குறித்த அளவிலேனும் பெற்றிட, கூனஞ்சேரியில் அஷ்ட பைரவ லிங்கங்களையும் ஆழ்ந்த பக்தியுடன் எட்டு அஷ்டமித் திதிகளில் தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.
 
     
  தல வரலாறு:
     
  மிதிலா நகரில் ஜனக மகாராஜன் மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தான். அந்த வேள்விச் சாலைக்குள் செல்வதற்காக சிறுவன் ஒருவன் காத்திருந்தான். அவன் உடலில் அத்தனை கோணல். முதுகில் கூன். ஒரு கை பின்புறமும் முதுகை முன்புறமும் திரும்பி மடங்கியவாறு கோணல். கால்களில் ஒன்று மழிந்து மடங்கி, சரிவர நடக்க முடியாத ஒரு பரிதாப நிலை. வேள்விச் சாலைக்குள் நுழைந்து, தலைமைப் பண்டிதர் வந்தியை சந்திக்க வேண்டும் என்று அந்த பாலகன் கேட்டான். காவலர்களோ அவனது தோற்றத்தைக் கண்டு தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கிடையே பெருத்த வாக்குவாதம் ஏற்பட்டது. வேள்விச்சாலை முன்னால் ஏற்பட்ட குழப்பத்தைக் கண்ணுற்ற ஜனகமகாராஜன், தன் இருக்கையை விட்டு அகன்று, வேள்விச் சாலையின் வாசலுக்கு வந்தான். விவரம் தெரிந்து கொண்டான். எனது தலைமைப் பண்டிதன் வந்தி அத்தனை சாத்திரங்களையும் கற்றறிந்த அறிஞர். பல நூற்றுக்கணக்கான முனிவர்களும், வேத விற்பன்னர்களும் அவரிடம் வாதத்தில் தோற்று விட்டனர். தன்னிடம் தோற்றவர்களை வந்திப் பண்டிதர் கங்கையில் மூழ்கும்படி செய்துள்ளார். இதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ? அப்படியிருந்தும், இப்படி ஒரு துணிச்சல் ஏன் ? என்று கோணல் சிறுவனைக் கேட்டார் ஜனகமகாராஜன்.

அதற்கும் பதிலளித்தான் அந்தச் சிறுவன், உம்முடைய தலைமைப் பண்டிதர், என் போன்ற வேதாந்தப் பயிற்சி பெற்றவர்களை இதுவரை சந்திக்கவில்லை. தன்னிடம் தோற்றவர்களை கங்கையில் மூழ்கடித்து விட்டதாக தற்பெருமை கொண்டுள்ளார். அறிஞனுக்கும் அகம்பாவம் சத்ரு ! எனது தந்தையாரையும் அவர் மூழ்கடித்துள்ளார். அந்த சோக வரலாற்றை என் அன்னை எனக்குக் கூறியுள்ளாள். அந்தக் கடனைத் தீர்க்க வந்திருக்கிறேன் நான். வேத சாஸ்திரங்களை பிறருக்கு உபதேசித்து வந்த பெரியோர்களில் ஒருவர், உத்தாலகர். அவரிடம் கஹோனகர் என்ற ஒரு சீடனும் இருந்தான். பக்தியும், ஒழுக்கமும் மிகுந்திருந்தாலும், கல்வி கற்கும் திறமை அவனிடம் பளிச்சிடவில்லை. எனவே, பிற சீடர்கள் அவனை எள்ளி நகையாடுவர். கல்வியில் மேன்மையுறாவிடினும், அவனது நியமம், பக்தி, குணம் ஆகியவற்றைக் கருதி, தனது மகள் சுஜாதாவையே அவனுக்கு மணமுடித்தார் உத்தாலகர்.

அவர்கள் இருவருக்கும் புத்திரனாகப் பிறந்தவன்தான் அந்தக் கோணல் சிறுவன். கருவிலிருந்தபோதே உத்தாலகர் மாணவர்களுக்கு அளித்த உபதேசங்களை உருப் போட்டு வந்தது அந்தச் சிசு. கஹோனகர், முற்றிலுமாக சாத்திர அறிவு பெறாததால், இரவு நேரங்களில், தான் கூறவேண்டிய பாடங்களை தப்பும் தவறுமாகப் படித்து வருவாராம். அன்னையின் வயிற்றில் இருந்தவாறே. இவற்றைக் கேட்ட அந்தச் சிசு. அய்யகோ ! வேத சாஸ்திரங்களை இப்படி உருக்குலைத்துவிடுகிறாரே என் தந்தை என மனமொடிந்து, தன் உடலைத் தானே பல வகையாக முறுக்கிக் கொண்டதாம். அதன் விளைவு, பிறக்கும்போது எட்டுக்கோணலுடன் விகாரமாக உருவெடுத்துப் பிறந்தது அந்தச் சிசு. அதற்கு அஷ்டா வக்கிரன் (எட்டுக் கோணல்) என்றே பெயரும் நிலைத்தது. அந்தக் குழந்தையும் வளர்ந்து, பன்னிரண்டு வயதை எட்டினான். அதற்குள்ளாகவே அத்தனை மறைகளையும், சாத்திரங்களையும், பிராமணங்களையும் முற்றும் கற்றறிந்தான். தாயின் மூலம் தன் தந்தை கஹோனகரும், ஜனகமகாராஜனின் சபைக்குச் சென்று வீடு திரும்பாத வரலாற்றைக் கேட்டறிந்தான். வந்தியை வாதத்தில் தோற்கடிக்கும் முடிவோடு வந்தவன் தான் இந்தக் கோணல் சிறுவன்.

அதன்பிறகு அஷ்டாவக்கிரன், வந்தியுடன் பல நாட்கள் வாதம் புரிந்தான். அவனது நாவன்மையில் அறிவொளி பளிச்சிட்டது கண்டவர் வியந்தனர். இறுதியில் வந்தி படுதோல்வி கண்டான். போட்டியின் விதிகளின்படி அவனும் கங்கையில் மூழ்கவேண்டியவன்தானே! அப்போதுதான் ஒரு ரகசியம் வெளிப்பட்டது. வருணலோகத்தில், அவனது தந்தையான வருணன் பெரியதொரு வேள்வி நடத்திட சான்றோர்கள் தேவைப்பட்டனர். தன்னுடன் போட்டியில் தோல்வியுற்றோரை கங்கையில் மூழ்கடித்து, வருண லோகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்கள் அனைவரையுமே உயிருடன் மீட்டுத் தருவதாகவும், தன்னை மன்னிக்க வேண்டுமெனவும் மன்றாடினான் வந்தி. கஹோனகரையும், இதர முனிவர்களையும் துன்புறுத்திய காரணத்தால், அவர்களது சாபத்தை வருணன் ஏற்க நேர்ந்தது. இத்தனை பெருமைகளை சாதித்த அந்தச் சிறுவன், இன்னும் எட்டுக் கோணலுடன் நடமாடக்கூடாது என்பதற்காக அவனது அத்தனை கோணலும் நீங்கி, அவனும் பிறரைப் போல அழகுபொருந்தியவன் ஆனான். அப்படி அவன் புது உருக் கொண்ட திருத்தலம், காவிரிக் கரையில் உள்ளது. அதுதான் கூனஞ்சேரி.

அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை, மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா, மண்பார்த்து விளைவதில்லை மரம்பார்த்து படர்வதில்லை, கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர், கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா'......'கூனஞ்சேரி பார்வதி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்'...மாற்றுத் திறனாளிகளுக்கான திருத்தலம். அங்க குறைபாடுகளை அகற்றும் ஈசன் அருளும் திருத்தலம். “பாலாரிஷ்ட நோயால் எனது குழந்தை அவதிப்படுகிறதே!' என்று கண்ணீர் விடும் தாய்க்குலங்களுக்கு ஆறுதலாக விளங்கும் தலம். குலோத்துங்க மன்னனால் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் சைவ சமயக் கோட்பாடுகளையும் தர்மங்களையும் கடைப்பிடித்து வந்த தானவ மகரிஷி என்பவர் சோழ நாட்டின் தண்ட காரண்யம் என்ற வனத்தில் தன் மனைவியுடன் இல்லற தர்மத்தில் ஈடுபட்டிருந்தார். நீண்ட காலமாக அவருக்கு புத்திரப்பேறு இல்லை. அதுகுறித்து சிவபெருமானை வேண்டினார். தானவர் கனவில் தோன்றிய சிவபெருமான், “ஏழைச் சிறுவர்களுக்கு வேத ஆகமங்களைப் போதித்து வந்தால், விரைவில் புத்திரன் பிறப்பான்' என்று அருள்வாக்கு கூறிட, அதன் படியே வேதம் போதித்து வரலானார். ஒருநாள் காலையில் தானவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது வகுப்பில் ஒரு மாணவன் அயர்ந்து துõங்கிக் கொண்டிருந்தான்.

இதைக் கண்டவர் சிறுவனை எழுப்பித் திட்டிவிட்டார். அப்போது அருகில் நின்ற அவரது மனைவியின் வயிற்றில் இருந்த கரு விழித்துக் கொண்டது. “ஏ! தகப்பனாரே! இரவு பகலும் ஓய்வின்றி பிள்ளைகளுக்குப் பாடம் போதித்து வந்தால் பிள்ளைகள் துõங்கத்தானே செய்வார்கள்? வேதம் போதிக்கும் குருவான உங்களுக்கு இதுகூடவா தெரியவில்லை?' என்றது. மழலைக் குரலில் தன்னை எதிர்த்துப் பேசுவது தன் வாரிசு என்றும் பார்க்காமல் கோபத்தில், “நீ பிறப்பதற்கு முன்பே அதிகப் பிரசங்கித்தனமாக கேள்வியா கேட்கிறாய்? வளைந்த கேள்விக்குறி போலவே நீ அஷ்டகோணலாகப் பிறக்கக் கடவாய்' என்று சாபம் கொடுத்தார். பத்து மாதங்கள் கழித்துக் கருவறையிலிருந்து வெளிவந்த அந்த ஆண் குழந்தை அஷ்ட கோணலாக பிறந்தது. மிதிலாபுரியில் ஜனக மன்னன் வாதத்திறமை போட்டி வைத்தான். இதில் கலந்து கொண்ட தானவ மகரிஷி, தனக்குப் பிறந்த அஷ்ட கோணல் பிள்ளையின் நினைவால் போட்டியில் சரியாக வாதாடாமல் தோல்வி கண்டு அரச தண்டனையும் பெற்றார். வறுமை வாட்டியது. இதன் காரணமாக கடற்கரைக்குச் சென்று சிவநாம ஜபத்தில் சில காலங்கள் ஈடுபட்டார். அப்போது தோன்றிய சிவபெருமான், “இத்தலத்தில் எட்டுவகை லிங்கங்களை பிரதிஷ்டை செய்து முறையாக வழிபட்டால், உன் பிள்ளையின் அஷ்ட கோணல் நீங்கி, அழகான உருவத்தை அடைவான்!' என்றார்.

இதற்கிடையில் அவரது மகன் அஷ்ட கோணன், ஜனக மகாமன்னன் அவையில் அமர்ந்து திறமை பொருந்தியவனாகி அனைத்து மகிரிஷிகளையும் வெற்றி கண்டு தலைமைப் பண்டிதனானான். அனைவரையும் வாதத்தில் வென்று தன் தந்தைக்கும் நற்பெயர் வாங்கித் தந்தான். தானவ மகரிஷி அஷ்டலிங்கங்களை பிரதிஷ்டை செய்து அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டார். சிவனருளால் அஷ்ட கோணன் சில மாதங்களில் கூன் நிமிர்ந்து அழகான உருவைப் பெற்றான். இதனால் இத்தலம் கூன் நிமிர்ந்த புரம் என்றாகி கூனஞ்சேரி என்றானது. விதர்ப்பகால சித்தர் என்பவர் இங்கு உள்ள அஷ்ட லிங்கத் திருமேனிகளையும் வணங்கி 'திருவண்ணாமலை' சென்று கிரிவலம் செய்து வழிபாடு நடத்தினார். இந்த ஆலயத்தில் பகல் வேளையில் எட்டு லிங்கத் திருமேனியையும் வழிபட்டு அன்று இரவே 'திருவண்ணாமலை' சென்று கிரிவலம் செய்தால் வாழ்வில் பேறுகள் பதினாறையும் பெற முடியும் என்று அகத்திய நாடி சொல்கிறது. கூன் நிமிர்ந்தபுரம் எனும் கூனஞ்சேரி தலத்தை தரிசிக்க நம் வாழ்வில் ஊனம் அகலும். 'நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம' எனப் பெற்றேன்?. 'வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் நின் அருளை'. 'நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண்'.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்து பலனடைவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar